சென்னை,
த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மரணம் அடைந்துள்ள நிலையில், காலியான கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், அரசியலுக்கு புது வரவான த.வெ.க. வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைத்தது. குறிப்பாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவரும், அப்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கொளத்தூர் தொகுதி உருவான நாளில் இருந்து 15 ஆண்டுகளாக 3 முறை (2011, 2016, 2021) எம்.எல்.ஏ.வாக இருந்த மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது, தி.மு.க. தொண்டர்களை மட்டுமல்லாது, தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்றாலும், கொளத்தூர் தொகுதி மக்கள் மத்தியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மீண்டும் நன்றி கூறினார்.
அவர் பேசும்போது, "ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சியினரால் (த.வெ.க.) நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம் கூட தனது மாண்பை இழந்து நிற்கிறது. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரை பார்த்திருப்பீர்கள். நல்ல வேளை கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். இந்த கொடுமை எல்லாம் பார்க்காமல் இருந்ததற்கு. கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றி" என்று கூறினார்.
தற்போது, த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவின் மூலம் கொளத்தூர் தொகுதி காலியாகி இருக்கிறது. ஏற்கனவே, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் கொளத்தூர் தொகுதியும் 6-வதாக இணைந்திருக்கிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. ஆனால், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே, இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலினை போட்டியிடச் செய்ய முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும், கரூர் தொகுதியில் போட்டியிடச் செய்ய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதற்கு மு.க.ஸ்டாலின் இசைந்து கொடுக்கவில்லை. தற்போது, அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதிக்கே இடைத்தேர்தல் வந்திருப்பதன் மூலம் களம் காண்பாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.
தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, வாக்களிக்காத கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். நல்ல வேளையாக சட்டசபைக்கு செல்லவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.