தமிழக செய்திகள்

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் இன்று தகனம்

வி.எஸ்.பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

வி.எஸ்.பாபு

சென்னை கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு (வயது 70). இவருக்கு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்து வந்தார்.

வி.எஸ்.பாபு மரணம்

இதனிடையே, 70 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து, வி.எஸ்.பாபு உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

உடல் இன்று தகனம்

இந்நிலையில், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. வி.எஸ்.பாபு உடல் இன்று மாலை இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் மாலை 4.30 மணியளவில் திரு.வி.க. நகர் தாங்கல் மின்மயானத்தில் வி.எஸ்.பாபுவின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

மறைந்த தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு பரிமளா என்ற மனைவியும், ராம்பிரகாஷ், சதீஷ், விக்னேஷ், பாலசுப்பிரமணி ஆகிய 4 மகன்களும், சரிதா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT