தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவில் உச்சம் தொட்ட கொங்கு மண்டலம்

தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளது. உச்சமாக தமிழ்நாட்டிலேயே அதிகமாக கரூரில் 92.63 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோல், சேலத்தில் 90.76 %, நாமக்கலில் 90.21%, ஈரோடு 90.10 % என 90 சதவீதத்திற்கு மேல் பதிவான அனைத்து மாவட்டங்களும் மேற்கு மண்டலமான கொங்கு பகுதியிலேயே உள்ளன.

தமிழ்நாட்டிலேயே குறைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61% ஆக பதிவாகியுள்ளது; அதேபோல், ராமநாதபுரத்தில் 77.01%, நெல்லை 77.94%, தூத்துக்குடி 80.53 %, தென்காசி 82.41% ஆகவும் குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளது

சிவகங்கை 76.66%, மதுரை 80.52%, தேனி 81.55%, விருதுநகர் 84.82% என தென்மாவட்டங்களில் எங்கேயுமே 85% வாக்குப்பதிவை தொடவில்லை.