தேரோட்டம் 
தமிழக செய்திகள்

கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா.. கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

தேரோட்டத்தின்போது ஒவ்வொரு வீட்டிலும் பொதுமக்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஒன்றியம், கூவம் கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள திரிபுராந்தக சுவாமியை அர்ச்சகர்கள்கூட தொட்டு பூஜை செய்தது கிடையாது. இதன் காரணமாக சுவாமியை தீண்டா திருமேனியர் என்று அழைப்பார்கள்.

இந்தக் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலையிலும் மாலையிலும் வாகன வீதி உலா நடைபெறுகிறது. பல்வேறு வாகனங்களில் சோமாஸ்கந்தர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திரிபுர சுந்தரி அம்பாளுடன் திருபுராந்தக சுவாமி எழுந்தருளியதும், தேர் வடம்பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். கூவம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். தேர் சென்ற வீதியில் ஒவ்வொரு வீடுகளிலும் சுவாமிக்கு பொதுமக்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர்.

நாளை செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி பஞ்சமூர்த்தி அபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்தி ரிஷப வாகன சேவையுடன் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா நிறைவு பெறுகிறது.