கோவை,
கோவை குற்றாலம் செல்லும் வழியில் சாடிவயல் யானைகள் முகாம் அமைந்துள்ளது. . இங்கு முத்து, காவிரி, ஜான் மற்றும் சுமங்கலா ஆகிய 4 யானைகள் வனத்துறையின் பராமரிப்பில் உள்ளன. இங்குள்ள இயற்கை சூழலை ரசிக்கவும், யானைகளை நேரில் காணவும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வம் இருந்து வருகிறது.
முதுமலை தெப்பக்காடு மற்றும் ஆனைமலை கோழிகமுத்தி யானைகள் முகாம்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, சாடிவயல் முகாமிலும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, சாடிவயல் யானைகள் முகாமிற்கு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சாடிவயல் யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக வனத்துறை கால்நடை டாக்டர்களிடம் கருத்துகள் கோரப்பட்டு உள்ளது. கோவை குற்றாலத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். முகாமில் யானைகளுக்கு காலை 8.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு உணவளிக்கப்படும். ஆனால் மாலை 4.30 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு வனப்பகுதிக்குள் இருப்பதற்கு அனுமதி இல்லை.
எனவே யானைகள் முகாமின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்ற நேரம் மற்றும் பிற அம்சங்கள் குறித்து ஆராய்ந்து உயர் அதிகாரிகளுக்கு முன்மொழிவு அனுப்பப்படும். அது ஏற்கப்பட்டால் யானைகள் முகாமை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.