தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்

கழக உடன்பிறப்புகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஊடகவியல் செயலாளர் பொறுப்பில், கோவை சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க.) முன்னணி முகங்களில் ஒருவரான கோவை சத்யன் வகித்து வந்த பொறுப்புகள் மாற்றப்பட்டு, அவருக்குப் புதிய முக்கிய பொறுப்பை வழங்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவில் நீண்ட காலமாகச் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் கோவை சத்யன். தற்போது, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) தலைவர் பொறுப்பில் இருந்து அவர் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியல் செயலாளர்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கோவை சத்யன் அவர்கள், இன்று முதல் அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஊடகவியல் செயலாளர் பொறுப்பில், கோவை சத்யன், PGDM., அவர்கள் (டெம்பிள் வியூ அபார்ட்மெண்ட்ஸ், தியாகராய வீதி, தியாகராயநகர், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஊடக தொடர்புகள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகளை இன்னும் வலுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT