தமிழக செய்திகள்

வஞ்சியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா

மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா பூ கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வஞ்சியம்மன் கோவில்

மூலனூரில் பிரசித்தி பெற்ற வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேர் திருவிழா மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா கடந்த 13-ந் தேதி விநாயகர் வழிபாடு, முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கோவில் முதன்மையாளர்கள் ராமநாதன், ராமசாமி ஆகியோர் முறைப்படி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் காலை 10 மணிக்கு கொடியேற்றி கங்கணம் கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கியது.

அதை தொடர்ந்து பக்தர்கள் ஊர்வலமாக மூலனூர் எல்லை பகுதியில் இருந்து அக்னி கம்பத்தை கடைவீதி வழியாக தாரை தப்பட்டை முழங்க கோவிலுக்கு எடுத்து வந்தனர். இரவு 10 மணிக்கு கும்பம் தாளித்தல், அம்மன் அழைத்தல், அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்னி கம்பத்தை கோவிலுக்கு முன் உள்ள கிணற்றில் கயிறு கட்டி இறக்கினார்கள். அதன் பிறகு ஒரு கும்பத்தில் சாமி உருவம் செய்து அதன் மீது வேப்பிலையும், பூவும் வைத்து அலங்காரம் செய்து பாடல்பாடி அம்மன் அழைப்பு நடைபெற்றது.

கம்பம் நட்டனர்

கிணற்றில் இருந்த அக்னி கம்பத்தை எடுத்து சாமி அலங்காரத்துடன் உள்ள கும்பத்தையும், அக்னி கம்பத்தையும் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு கோவிலுக்கு முன் நட்டனர். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சாமியை தரிசித்தனர். பின்னர் அக்னி கம்பத்திற்கு பெண்கள் புனித நீர் ஊற்றினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி 27-ந் தேதி காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் லட்சார்ச்சனை நடக்கிறது. பின்னர் கலச பூஜை, வேள்வியுடன் இரவு 9 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெறுகிறது. 28-ந் தேதி திருக்கல்யாணம், மாவிளக்கு எடுத்தல் மற்றும் அன்று இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தேராட்டம்

மார்ச் 1-ந் தேதி காலை திருத்தேர் எழுந்தருளல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு பூவோடு எடுத்தலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 2-ந் தேதி தீர்த்தக்காவடி செலுத்துதலும் மற்றும் அக்கினி கம்பம் கிணற்றில் விடுதலும், 3-ந் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீர், மறு அபிஷேகம் தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்கராஜ் மற்றும் கோவில் குலத்தவர் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT