தமிழக செய்திகள்

திருப்பதி வெங்கடாசலபதி ஓவியம் வரைந்த கோவில்பட்டி ஓவியர் காலமானார்

வெங்கடாசலபதியை நகைகளுடனும் தனித்தனியாகவும் சீனிவாசன் வரைந்த ஓவியத்தை தேவஸ்தானம் அங்கீகரித்தது.

கோவில்பட்டி,

திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் பல்வேறு தெய்வ உருவங்களை ஓவியங்களாக வரைந்த கோவில்பட்டி ஓவியர் சீனிவாசன் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 86). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பிரபல ஓவியர் கெண்டையராஜூவிடம் ஓவியம் பயின்றார்.

1970-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பின்பேரில் கோவில் கருவறையில் இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி அருகே அமர்ந்து அந்த சிலை வடிவத்தை அப்படியே ஓவியமாக வரைந்தார்.

நகைகள் இல்லாமலும், நகைகளுடனும் தனித்தனியாக வெங்கடாசலபதியை ஓவியமாக வரைந்தார். இந்த ஓவியத்தை தேவஸ்தானம் அங்கீகரித்தது.

காலமானார்

மேலும், இவர் வரைந்த திருப்பதி வெங்கடாசலபதி ஓவியத்தை சிவகாசி அச்சகத்தினர் பெற்று, போட்டோக்களாகவும், காலண்டர்களிலும் அச்சடித்தனர். அனைத்து கடைகள், வீடுகளில் சீனிவாசன் வரைந்த வெங்கடாசலபதி ஓவியமே அலங்கரித்து வருகிறது.

அன்று முதல் பிரபலமான ஓவியராக வலம் வந்த சீனிவாசன் வயது மூப்பு காரணமாக நேற்று கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT