தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஒரே பெண் இரண்டு பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் 23 வயதான கார்த்திகா. இவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த 36 வயதான சித்தார்த்தன் என்பவருக்கும், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தஞ்சாவூரில் வெகு விமரிசையாக திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்திற்காக இடைத்தரகர்களுக்கு 3 லட்சம் ரூபாயும், மணமகளுக்கு 3 பவுன் நகையும் போட்டு, சுமார் 15 லட்சம் ரூபாய் வரை சித்தார்த்தன் தரப்பு செலவு செய்துள்ளது. ஆனால், திருமணம் முடிந்த இரண்டாவது நாளே, தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கூறி கார்த்திகா கோவில்பட்டிக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து, தீபாவளி பண்டிகைக்கு கூட அவர் தஞ்சாவூர் திரும்பாததால் சந்தேகமடைந்த சித்தார்த்தன், தனது குடும்பத்தினருடன் கோவில்பட்டியில் உள்ள கார்த்திகாவின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு கார்த்திகா இல்லாத நிலையில், நாமக்கல்லை சேர்ந்த 37 வயதான ரஞ்சித்குமார் என்பவர் அதே வீட்டிற்கு வந்து, 'என் மனைவி கார்த்திகா எங்கே?' எனக் கேட்டுள்ளார். கடந்த நவம்பர் 1-ம் தேதி தனக்கும் கார்த்திகாவுக்கும் கோவிலில் திருமணம் நடந்ததாக அவர் கூறியதை கேட்டு, சித்தார்த்தன் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து, கார்த்திகாவின் பெற்றோர் என கூறிக்கொண்ட முனீஸ்வரி மற்றும் மாரியப்பன் ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். முதலில் தான் புரோக்கர் என கூறிய மாரியப்பன், பின்னர் முனீஸ்வரியின் கணவர் என கூறியுள்ளார். மேலும், கார்த்திகா தன் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தூத்துக்குடி மருத்துவமணையில் இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சித்தார்த்தன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், கார்த்திகா, மாரியப்பன், முனீஸ்வரி ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கும்பல் வேறு யாரையாவதோ இதேபோல் ஏமாற்ற முயன்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.