நுழைவுக் கட்டணம்  
தமிழக செய்திகள்

ஆம்னி பேருந்து நுழைவுக் கட்டணம் உயர்வை உடனே கைவிட வேண்டும் - அரசுக்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்கான மாதக் கட்டணச் செலவு ரூ.4,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

கோயம்பேடு ஆம்னி பேருந்து நுழைவுக் கட்டணம் வரும் 15.10.2026 முதல் அதே 24 மணி நேரத்திற்கு ரூ.500 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

நுழைவுக் கட்டணம் உயர்வு

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயம்பேடு சென்னை ஒப்பந்த ஊர்திப் பேருந்து நிலையத்தில், ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டணம் 24 மணி நேரத்திற்கு ரூ.150 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் வரும் 15.10.2026 முதல் அதே 24 மணி நேரத்திற்கு ரூ.500 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பேருந்துக்கான கட்டணம்ரூ.350 கூடுதலாகவும், சுமார் 233.33% உயர்வாகவும் அமைந்துள்ளது. என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

ரூ.10,500 கூடுதல் செலவு ஏற்படும்

எரிபொருள், சாலை வரி, காப்பீடு, சுங்கக் கட்டணம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளால் பேருந்து உரிமையாளர்கள் ஏற்கெனவே பெரும் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலைய நுழைவுக் கட்டணத்தின் இந்த உயர்வு மேலும் செலவு சுமையை ஏற்படுத்தும். ஒரு பேருந்திற்கு மாதத்தில் 30 நாட்களும் முந்தைய மாதச் செலவு ரூ.4,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்ந்து, ஒரு பேருந்துக்கு மாதம் ரூ.10,500 கூடுதல் செலவு ஏற்படும். இந்த செலவு பயண கட்டணங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பேருந்து நிலையத்தின் பராமரிப்புக்கும் மேம்பாட்டிற்கும் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்படுவதை எங்கள் சங்கம் ஆதரிக்கிறது. இருப்பினும், ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான உயர்வை அமல்படுத்துவது பேருந்து உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, முதல்-அமைச்சர் தலையிட்டு, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்:

1. 15.10.2026 முதல் ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டணத்தை ரூ.150-லிருந்து ரூ.500-ஆக உயர்த்தும் அறிவிப்பின் அமலாக்கத்தை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.

2. கட்டண உயர்வு குறித்த மறுபரிசீலனை முடியும் வரை, ஆம்னி பேருந்துகளுக்கு 24 மணி நேரத்திற்கு ரூ.150 என்ற முந்தைய நுழைவுக் கட்டணத்தையே தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.

3.பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, நியாயமான நுழைவுக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

4. நுழைவுக் கட்டணத்தை பாஸ்டேக் முறையில் வசூலிப்பதுடன், பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள், குடிநீர், விளக்குகள், தூய்மை, பாதுகாப்பு மற்றும் வாகன நுழைவு, வெளியேற்றம், நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

5.மேலும், கோயம்பேட்டிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்போதுள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் சுமார் 150 பேருந்துகளை மட்டுமே நிறுத்துவதற்கான வசதி உள்ளது. எனவே, தற்போது பயன்பாடின்றி உள்ள சிஎம்டிஏ கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகளின் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து நெரிசல்

இதன் மூலம், பயணிகள் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பேருந்து இணைப்பு வசதிகளை பயன்படுத்தி பேருந்து நிலையத்தை எளிதாக சென்றடைந்து, நிலையத்தின் உள்ளேயே பாதுகாப்பாக ஆம்னி பேருந்துகளில் ஏறிப் பயணம் செய்ய முடியும். மேலும், சாலையோரங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவதால் ஏற்படும் இடையூறுகள் குறைந்து, கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

உரிய நடவடிக்கை

பொதுமக்களின் பயண வசதியையும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு, பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பயணிகளின், மற்றும் பயண சிரமங்களை குறைத்து அவர்களுக்கு பெரும் பயனளிக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT