சென்னை,
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் 1,200-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளுக்காக தினமும் சுமார் 3 ஆயிரம் டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த கடைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி விவசாயிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இன்று காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது. இதனால் சந்தைக்கு வழக்கமாக கொண்டு வரப்படும் காய்கறிகள் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகளின் ஓட்டுநர்களும், கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளர்களும் தீபாவளி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு சென்றுவிடுவார்கள்.
இதன் காரணமாகவும் நாளை காய்கறி வரத்து இருக்காது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி. ராஜசேகரன் தெரிவித்தார்.