கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே தனியார் தொழிற்சாலையில் கழிவுநீ தொட்டியை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் தர்மபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியை சேர்ந்த சாரதிகுமார் (வயது 25), பஞ்சப்பள்ளி தின்னூரை சேர்ந்த அக்மல் பாபுபாய் (28), அனுமந்தபுரம் அருகே ஜம்பூத் பகுதியை சேர்ந்த காவேரி (32) ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்த தொழிற்சாலையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். நேற்று மாலை இவர்கள் 3 பேரும் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட் டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென மயங்கி தொட்டிக்குள் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு, ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினர், அவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தக வல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது. இங்கு கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வெளியில் வராமல் இருக்க ரசாயன பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதுவே விஷவாயுவாக மாறி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் தொழில் பாதுகாப்பு நடைமுறையில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்கிற கோணத்தில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.