தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.9.89 கோடியில் புதிய வீடுகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கித் தொடங்கி வைத்தார்.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், முகாம்வாழ் தமிழர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையையும் உயர்த்தி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள்

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்த்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், இன்று தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 கோடியே 52 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 1 கோடியே 37 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்தார். மேலும், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன் காத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் மாதாந்திரப் பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதோடு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

வீடுகள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 கோடியே 52 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 1 கோடியே 37 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

பணக்கொடையை வழங்குதல்

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் மாதாந்திரப் பணக்கொடையை, குடும்பத் தலைவருக்கு ரூ.1,500/-லிருந்து ரூ.1,800/-ஆகவும், குடும்ப உறுப்பினர்களாகவுள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,000/-லிருந்து ரூ.1,200/-ஆகவும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500/-லிருந்து ரூ.600/-ஆகவும் உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை ஆண்டொன்றுக்கு 14 கோடியே 95 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினத்தில், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் வழங்கிடும் விதமாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் சுந்தரவல்லி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குநர் வளர்மதி, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை இணைச் செயலாளர் மா.சௌ.சங்கீதா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT