கிருஷ்ணகிரி,
லாரி மோதியதில் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியானார்கள். அவர்களது நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் (வயது 22). கார் டிரைவர். அதேபகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் மகன் அசோக்குமார் (24), முருகன் மகன் திவாகர் (18), குமார் மகன் திருப்பதி (22), அச்சமங்கலம் அன்பழகன் மகன் திருப்பதி (22). நண்பர்க ளான 5 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றனர்.
அப்போது அரசு பொறியியல் கல்லூரி மேம்பாலத்தில் சென்ற போது பின்னால் வந்த லாரி, காரின் பின்பகுதியில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சதீஸ் உள்பட 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் அன்பழகன் மகன் திருப்பதி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.