தமிழக செய்திகள்

கூடங்குளம்: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் வக்கீல் உயிரிழப்பு

தீபிகாவுக்கு கடந்த வாரம் ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கூடங்குளம்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் வடக்கு அய்யா கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் தீபிகா (வயது 23). இவர் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலையில் தீபிகா தனது வீட்டின் 2-வது மாடிக்கு சென்றார். மாடியின் சுவற்றில் நின்றுகொண்டு, அருகிலிருந்த மரத்தில் முருங்கைக்காய்களை பறிக்க முயன்றார். அப்போது நிலை தடுமாறியதால் 2-வது மாடியில் இருந்து பக்கத்து வீட்டின் முதல் மாடியில் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதற்கிடையே மகளை காணாமல் தேடிய பெற்றோர். மாடியில் இருந்து தவறி விழுந்து தீபிகா துடித்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பரிதாப பலி

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்தபோது, தீபிகா ஏற்கனவே பரிதாபமாக இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் நெஜில்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீபிகாவுக்கு கடந்த வாரம் ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்துக்கு இன்னும் 15 நாட்களே இருந்த நிலையில் தீபிகா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.