தமிழக செய்திகள்

குற்றாலத்தில் இன்று முதல் சாரல் விழா: அமைச்சர் ராஜீவ் தொடங்கி வைத்தார்...!

சாரல் விழா 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

தென்காசி,

குற்றாலத்தில் சாரல் விழா இன்று தொடங்கிய நிலையில் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

சாரல் திருவிழா

குற்றாலத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா, குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் சாரல் விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர். குற்றால சாரல் திருவிழா இன்று முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது.

கலைநிகழ்ச்சிகள்

சாரல் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று கடையம், கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து கிராமிய கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகம், காவடி, மயிலாட்டம் போன்றவை நடைபெற்று வருகிறது

இதையடுத்து, நாளை 1-ந்தேதி காலை 10 மணிக்கு கொழு கொழு குழந்தைகள் போட்டி, காலை 11 மணிக்கு யோகாசனம் மற்றும் ஆணழகன் போட்டி, நண்பகல் 12 மணிக்கு குருவிகுளம் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், பிற்பகல் 2 மணிக்கு செல்ல நாய்கள் கண்காட்சி, மாலை 4.30 மணிக்கு பல்கிஷ் கிராமியக் கலைக்குழு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா கலைக்குழுவினர் பரதநாட்டியம், மாலை 5 மணிக்கு ஹரிணி வழங்கும் மேஜிக் ஷோ, மாலை 5.30 மணிக்கு முத்துச்சந்திரன் கலைக்குழு தோல்பாவை கூத்து நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு மொறப்பூர் பாரதி கிராமிய கலைவளர்ச்சி மையம் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, மதுரை பாலா கலைக்குழுவினர் கரகாட்டம், திருநங்கைகள் பங்குபெறும் பல்சுவை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு தென்காசி, ஐயம்மாள் கலைக்குழு வில்லிசை, சென்னை, ஏஞ்சல் கலைக்குழு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, அபிநயகீதம் குழுவினர் திரைப்பட மெல்லிசை நடைபெற உள்ளது. இதேபோன்று வருகிற 5-ந்தேதி வரையிலும் தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.