தமிழக செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எல்.முருகன்

எச்.ராஜாவின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதில் பெருமகிழ்ச்சி என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எச்.ராஜா, மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மூலம் நன்கு குணமடைந்து வருகிறார். அவர், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடி வருகிறார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று, எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், மத்திய மந்திரி எல்.முருகன் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தி அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இன்று, சென்னையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க. மூத்த தலைவர் பாசமிகு அண்ணன் எச்.ராஜாவை மருத்துவமனையில் சந்தித்தேன். அவரது உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் பெருமகிழ்ச்சி. அவர் விரைவில் உடல் நலம் தேறி, மீண்டும் தேசப்பணிக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் முருகப்பெருமானை வேண்டுகிறேன்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.