தமிழ்நாடு உழைப்பாளர் சங்க (எச்.எம்.எஸ்.) மாநில மாநாடு நெல்லை கொக்கிரகுளத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயல் தலைவர் ஆறுமுகம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்குமார், கருப்பசாமி, அமீர் அப்துல், அப்துல்லா, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட தலைவர் முகமது ஷாஜகான் வரவேற்றார்.
எச்.எம்.எஸ். சங்க தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் கொடியேற்றி மாநாட்டு உரையாற்றினார். மாநில செயல் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டில், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெல் ஈரப்பதம் அளவை 20 சதவீதம் வரை அனுமதி பெற்றுத்தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சாலையோர உணவகங்கள் இரவு நேரம் செயல்பட காலநிர்ணயம் விதிக்க கூடாது. நடைபாதை சிறு-குறு வியாபாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். கிராமிய, நாட்டுப்புற கலைஞர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். விவசாய கூலித்தொழிலாளர்களை பாதுகாக்க வருவாய் துறை மூலம் வழங்கப்பட்டு உள்ள உழவர் பாதுகாப்பு அட்டை மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நெல்லை மகளிர் அணி தலைவி ஹமீதா நன்றி கூறினார்.