நாகப்பட்டினம்,
வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியில் உள்ள முகமது கனிபா என்பவரது வீட்டில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. அங்கு பணகுடியை சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர் உட்பட பலர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சங்கர் ஹேமர் ட்ரில் மெஷின் மூலம் கான்கிரீட் கூரையை துளையிட்டுக் கொண்டிருந்தார். அந்தவேளை திடீரென காங்கிரீட் கூரை உடைந்து கீழே விழுந்தது. அவற்றுடன் சங்கரும் கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.
இது குறித்து உடனடியாக தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்கு தாமதமானதால் அப்பகுதி பொதுமக்கள் இடிபாடுகளை அகற்றி சங்கரை மீட்டனர். பின்னர், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.