தமிழக செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு

நீர் வரத்து வினாடிக்கு 690 கன அடியாக குறைந்துள்ளது.

கூடலூர்,

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியாக சரிந்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரளம் மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய பாசன நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 921 கன அடியாக காணப்பட்டது.

நீர்மட்டம் சரிவு

இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைய தொடங்கியதால். நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.90 அடியாக சரிந்தது. நீர் வரத்து வினாடிக்கு 690 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் 3,202 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.