கோவை,
கோவை குனியமுத்தூரில் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் 9-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:-நீதி துறையும், வழக்கறிஞர் துறையும் சந்தித்து வரும் கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நீதித்துறை, வரலாற்றில் இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சட்டக்கல்லூரிகள் காளான்கள் போல் உருவாகி வருகின்றன. இதனால் சட்டக்கல்வி பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பல சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், சில முக்கிய பாடங்கள் கற்பிக்கப்படுவதும் இல்லை. போதிய பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. பார் கவுன்சில் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை விட்டு, அதை சுயேச்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமிக்கப்படும் கொலீஜியம் முறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக கொலீஜியம் முறை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டாலும், நீதிபதிகள் தேர்வு செய்யப்படும் நடைமுறை வெளிப்படையாக இல்லை. மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு நடைமுறை உள்ள நிலையில், ஐகோர்ட்டு நீதிபதிகள் தேர்வுக்கு தெளிவான நடைமுறை இல்லை. எனவே ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தகுதி புள்ளிகள் மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு முறைகளை உருவாக்க வேண்டும்
நீதித்துறையில் ஏ.ஐ.யால் பெரிய மாற்றம் ஏற்படலாம். இப்போது பல பணிகளை ஏ.ஐ. செய்து வருகிறது. நீதித்துறைதான் ஏழை, எளிய மக்களின் கடைசி நம்பிக்கை. நீதிமன்ற தீர்ப்புகளை அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் பார்க்கக்கூடாது. சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து போதிய அறிவு இல்லாமல் பலர் கருத்துகளை பதிவிடுகின்றனர். இதனை பார்ப்பவர்கள் உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித்துறை இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.