சென்னை,
நடிகை கவுதமி நில மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக போலீஸ் கமிஷனரை சந்தித்தார்.
நடிகை கவுதமி, சினிமாவில் சம்பாதித்த பணத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கரில் இடம் வாங்கி இருந்தார். இந்த இடத்தை விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை காரைக்குடியை சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் கொடுத்திருந்தார். ஆனால் அவர், ஸ்ரீபெரும்புதூரில் கவுதமி பெயரில் இருந்த ரூ.25 கோடி மதிப்பிலான சொத்தை ரூ.6 கோடிக்கு மட்டும் விற்று மோசடியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கவுதமி, தகுந்த ஆதராங்களுடன் சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த 2023-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நடிகை கவுதமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு உதவி கமிஷனரை இன்று சந்தித்துவிட்டு சென்றார்.