பழனி,
பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
பழனியில், தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் இருக்கிறது. அந்த நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். அதோடு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
அதையடுத்து திண்டுக்கல்லை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி மற்றும் வக்கீல் அன்வர்தீன், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் வக்கீல் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையிலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் மதுரை சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமீன் கேட்டு அளித்த மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டும் தள்ளுபடி செய்தது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் எவ்வித தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். அவரது வீட்டில் இருந்த கணினி, ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றி வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இவ்வழக்கில் மேலும் ஒரு பத்திர எழுத்தர் சிவக்குமார் உள்பட 5 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கடந்த 2 மாதமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வந்தனர்.
இந்த மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளி குறித்தும் இதற்கு பின்புலத்தில் இருந்த மற்ற நபர்கள் குறித்தும் துப்பு கிடைக்கவில்லை. முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதால் இதுவரை நடத்திய விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
தற்போது சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் நடமாட்டம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து வந்தது. அவர்களது செல்போன், வாட்ஸ்அப் உரையாடல்கள் சமூக வலைதளப்பதிவுகள், வங்கி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் ஆகியவற்றையும் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இதன்படி சார்பதிவாளர் அலுவலக இளைநிலை உதவியாளர் சிவசங்கரி மற்றும் இடைத்தரகர் ஜெயபிரகாசுக்கு உடந்தையாக செயல்பட்டதாக வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.