சென்னை,
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும் ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர்.
இங்கு இருந்த 20 வீடுகளில் 80-க்கு மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடுந்து விழுந்ததில் பலர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.