தமிழக செய்திகள்

சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டி.ஜி.பி.யாக மாற்றம்

தமிழக டி.ஜி.பி. பதவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார்.

சட்டசபை தேர்தல் முடிந்து த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யு.பி.எஸ்.சி. ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டி.ஜி.பி. பதவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.

அவர், சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று காலை பதவி ஏற்கிறார். இதனால், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை மற்றும் சீர்திருத்த சேவைகளுக்கான டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார். இதேபோன்று கூடுதல் டி.ஜி.பி.யான கே. சங்கர், போதை பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவியேற்க உள்ளார்.

SCROLL FOR NEXT