சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை தேசிய பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளபக்கத்தில், “காங்கிரஸ்-த.வெ.க. (Congress-TVK) ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இதற்காகவா தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தார்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளது. ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
மேலும் முதல்-அமைச்சர் விஜய் நடித்த ’கத்தி’ படத்தில் இருந்து சிறைவாசிகள் தப்பியபோது, அதனை அவர் கண்டறிய சிறையின் திட்ட வரைபடத்தை பார்வையிடும் காட்சியை குறிப்பிட்டு தொடங்கும் அந்த வீடியோவில், “23-ம் தேதி இரண்டு சிறைவாசிகள் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தப்பித்தனர். இந்த சிறையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், ஆகஸ்ட் 28-ம் தேதி ஆய்வு செய்திருந்தார். ஆனால், அது வெறும் தொடக்கம்தான். 26-ம் தேதி (திங்கள் கிழமை) தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் சிறை காவலர்களை தாக்கிவிட்டு, தப்பித்துள்ளனர்.
த.வெ.க. அமைச்சர்களும், கூட்டணியினரும் பிரபலத்திற்காக ரீல்ஸ் வெளியிட்டுக்கொண்டிருக்க, த.வெ.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதல்-அமைச்சர் விஜய், தனது பிரச்சாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தனது ஆட்சியில் சிறப்பாக இருக்கும் என பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், தற்போது அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் விஜய், குற்றங்கள் மீதான நடவடிக்கை முற்றிலும் காணாமல் போயுள்ளது. இதுதான் தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்தார்களா..? இதற்காகவா அவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள்? இந்த அரசாங்கத்தின் வெட்கக்கேடு” என்று அதில் பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.
இதுவரை தேசிய பா.ஜ.க. சார்பில் த.வெ.க. அரசை நேரடியாக விமர்சனம் செய்யாதநிலையில், முதன்முறையாக இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.