சென்னை,
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் முழு விவரங்கள்:-
தீர்மானம்: 1
தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகள் அதனை முழுமையானதாக இல்லாததால், ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 2
தமிழ்நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க, குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனைகளை வழங்கி, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 3
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தினந்தோறும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, கல்வி, தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளை பெரிதும் பாதித்து வருகிறது. இதனால் பொதுமக்களிடையே அதிருப்தியும், கவலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுத்து, தடையற்ற மற்றும் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 4
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சிக்காமல் நடுநிலையுடன் செயல்பட்டு, இரு மாநிலங்களுக்கிடையில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 5
தமிழக அரசின் அறிவிப்பின்படி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தக் கடைகள் உண்மையாகவே மூடப்பட்டுள்ளனவா அல்லது இன்னும் மூடப்படாமல் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடைபெறுகிறதா என்பதை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மேலும் பல்லாயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.