தமிழக செய்திகள்

நெல்லையில் வக்கீல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் தனது அக்காள் தற்கொலைக்கு அவரது கணவர் தான் காரணம் என்று நினைத்த அப்பெண்ணின் தம்பி கூட்டாளிகளுடன் சேர்ந்து தனது மைத்துனரை வெட்டிக் கொன்றார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் பூலுடையார்(எ)பாண்டி (வயது 35). வக்கீலான இவருடைய மனைவி ராஜலட்சுமி(31). இவர்கள் நெல்லை பாளையங்கோட்டை தியாகராயநகர் டி.வி.எஸ்.நகரில் வசித்து வந்தனர். ராஜலட்சுமி ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பூலுடையாருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1-ம் தேதி கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜலட்சுமி சாவுக்கு பூலுடையார்தான் காரணம் என நினைத்து அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று முன்தினம் தகராறு செய்தனர். நேற்று கடம்போடுவாழ்வு வீட்டில் பூலுடையார் இருந்தார். அப்போது அங்கு ஒரு காரில் மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பூலுடையார் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்களை பார்த்ததும் அவர் வெளியே ஓடினார். எனினும் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று அந்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பூலுடையார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதைத் தொடர்ந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. இந்த கொலை குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பூலுடையாருக்கும், ராஜலட்சுமிக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 70 சவரன் நகை, பல லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகவும், ராஜலட்சுமியிடம் மேலும் நகை, பணம் கேட்டு பூலுடையார் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ராஜலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ராஜலட்சுமியின் தம்பி அருணாசலராஜாவுக்கு(29) தெரியவந்தது. தனது அக்காள் தற்கொலைக்கு பூலுடையார் தான் காரணம் என்று நினைத்து அவரை பழிக்கு பழியாக கொலை செய்வதற்காக தனது கூட்டாளிகளான ராம்(29) உள்பட சிலரை அழைத்துக் கொண்டு கடம்போடு வாழ்வு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பூலுடையாரை ஓட, ஓட விரட்டிச் சென்று வெட்டிக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற அருணாசலராஜா, ராம் ஆகிய 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.