தமிழக செய்திகள்

வக்கீல்கள் நலச்சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கடந்த வாரம் காட்டுமன்னார்கோவில் வக்கீல்கள் நலச்சங்க தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேத்தியாத்தோப்பு,

வக்கீல்கள் நலச்சங்க தலைவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மர்மகும்பல்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் தங்க விக்ரம் (வயது 40), வக்கீல். இவர் கடந்த வாரம் காட்டுமன்னார்கோவில் வக்கீல்கள் நலச்சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக இருந்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் தங்க விக்ரம், செட்டித் தெருவில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை சுற்றி வளைத்தது.

டாக்டர்கள் சிகிச்சை

பின்னர் அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்க விக்ரமை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தங்க விக்ரமை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மர்மநபர்கள் யார்..?

இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வக்கீலை வெட்டிய மர்மநபர்கள் யார்?, எதற்காக வெட்டினார்கள் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, சம்பவ இடத்தை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். வக்கீல்கள் நலச்சங்க தலைவரை மர்மகும்பல் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT