தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது சட்ட நடவடிக்கை: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT