சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையில், வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் குழுவாகவும், தனித்தனியாகவும் விமானம் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் சென்னையில் வசித்து வரும் மக்கள், தங்கியிருந்து வேலை செய்யும் இளைஞர்கள், இளம்பெண்கள் என பலரும் நேற்று முதலே தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். பஸ்கள், ரெயில்கள், கார்கள் என பல்வேறு வாகனங்களில் சொந்து ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட் தீர்ந்துவிட்டன. இதனால் பயணிகள் சிலர் விமானங்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் விமானக் கட்டணம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. சென்னை - தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 கட்டணமாக உள்ள நிலையில் இன்று ரூ.17,527 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.13,320, திருச்சிக்கு ரூ.14,237ஆக விமானக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை - கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,319 கட்டணமாக உள்ள நிலையில் இன்று ரூ.12,027- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்ததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.