தமிழக செய்திகள்

சட்டப்பேரவை நேரலை நிறுத்தம்: முதல்-அமைச்சரின் திணறல் வெளிப்பட்டு விடும் எனும் பயம்தான் காரணமா? - எச். ராஜா

பேப்பரில் எழுதி வைத்த தீர்மானங்கள் வரை மட்டும் தான் முதல்-அமைச்சரால் ஓரளவு சமாளித்து படிக்க முடியும்.

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

‘எங்களது ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் மக்கள் அனைவரும் காணும்படியாக நேரலை செய்வோம். நாங்கள் அவ்வளவு வெளிப்படையாக்கும்’ என தற்பெருமை பேசி வந்த தவெக அரசு இன்று மேகதாது அணை விவகாரத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது எதிர்கட்சிகளின் தலைவர்கள் பேசுவது வரை மட்டுமே நேரலை செய்தார்கள். அதன் பிறகு கவர்னர் உரை மீதான விவாதங்கள் நடக்க துவங்கியதும் நேரலை நிறுத்தப்பட்டது.

நேரலை நிறுத்தம்

பேப்பரில் எழுதி வைத்த தீர்மானங்கள் வரை மட்டும் தான் முதல்-அமைச்சரால் ஓரளவு சமாளித்து படிக்க முடியும். மற்றபடி எதிர்கட்சிகள் எழுப்பும் தடாலடி திடீர் கேள்விகளுக்கு தானாக பதிலளிக்க முடியாமல் முதல்-அமைச்சர் திணறுவார் எனும் பயம் காரணமாக இந்த நேரலை நிறுத்தப்பட்டதா? மக்கள் காண முடியா விட்டாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் முதல்-அமைச்சரின் திணறலும், தட்டுத்தடுமாற்றங்களும் வெளி வரத்தானே செய்யும்? கத்திரிக்காய் முத்தினால கடைக்கு வந்தே தீரும் என்பது போல சட்டமன்றத்தில் நடப்பவற்றை முதல்-அமைச்சர் இரும்புத்திரையே போட்டு மறைத்தாலும் ஜனநாயகத்தில் அவை அன்றே வெளி வந்து விடும். அப்புறம் எதற்கு இந்த ரகசிய செட்டிங் எல்லாம்?

வலுவான ஆட்சி

ஆஹா முதல்-அமைச்சர்…ஒஹோ முதல்-அமைச்சர் எனும் பிம்பங்களை கட்டமைத்து மட்டுமே ஒரு அரசாங்கத்தை ஆக்கபூர்வமாக நடத்தி விட முடியாது. அவ்வப்போது மட்டுமே வசனங்களை படித்து ஒப்பிக்க சட்டமன்றம் ஒன்றும் சினிமா காட்சி கிடையாது. அன்றாடம் மக்களை, அவர் தம் உணர்வுகளை, சுற்றிலும் நடக்கும் செய்திகளை, இடித்துரைக்கும் எதிர்கட்சிகளை உற்று கவனிக்க வேண்டும். உன்னிப்பாய் ஆழ்ந்து சகலமும் படிக்க வேண்டும். அப்போது மட்டும் தான் வலுவாக ஆட்சி செய்ய முடியும்.

எனவே சமாளிப்புகளை தவிர்த்து நிஜமான உள்ளுணர்வோடு உங்களை நிருபித்து ஆட்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்களும் சென்ற ஆட்சியைப் போலவே தமிழகம் காணும் மற்றும் ஒரு பொம்மை முதல்-அமைச்சரே!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.