நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் இரவு, பகலாக ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரமானதும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தைகள் ஊருக்குள் வந்து கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கடித்துக்கொன்று வருகிறது.
கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த உதயா என்பவரது வீட்டில் நாய், பூனை உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று அவரது வீட்டின் முன்பு மெதுவாக நடந்து வந்தது. அப்போது அங்கு படுத்து கிடந்த வளர்ப்பு நாய், பூனையை பிடிக்க முயன்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் தப்பியது. ஆனால், பூனை சிறுத்தையிடம் சிக்கியது. பின்னர் சிறுத்தை, பூனையை இழுத்து சென்றது.
இதனிடையே வளர்ப்பு நாயின் சத்தத்தை கேட்டு உதயா குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். பின்னர் பூனை காணாமல் போனதை அறிந்து வீட்டில் பொருத்தியிருந்த கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தை வந்து பூனையை இழுத்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.