தமிழக செய்திகள்

சத்தியமங்கலம் சாலையில் உலா வந்த சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தவோ, வாகனத்தை விட்டு இறங்கவோ கூடாது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மான்கள், யானைகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், புலிகள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள சாலையில் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மதியம் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த சிறுத்தைப்புலி ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் உலா வந்தது. அதன்பின்னர் சாலையோரத்தில் படுத்துக்கொண்டது.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

இதைபார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்தினர். பின்னர் வாகனங்களில் இருந்தபடியே தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் சாலையோரத்தில் படுத்திருந்த சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. பட்டப்பகலில் சாலையில் உலாவிய சிறுத்தைப்புலியால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'கடந்த சில நாட்களாக திம்பம். ஆசனூர், கேர்மாளம் சாலையில் சிறுத்தைப்புலி உலா வருகிறது. வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தைப் புலி காட்டுக்குள் செல்லாமல் தொடர்ந்து சாலையில் உலா வருகிறது. எனவே வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தவோ, வாகனத்தை விட்டு இறங்கவோ கூடாது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என்றனர்.