சிறுத்தை 
தமிழக செய்திகள்

ஆசனூர் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இப்பகுதியில் உள்ள மதுபானக் கடை மாலை 7 மணிக்குள் அடைக்கப்பட்டன.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையின் நடமாட்டம் தீவிரமாக உள்ளதால், மலை கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை தாக்கி ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் பங்களாதொட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற கூலித் தொழிலாளி கடந்த 3-ந்தேதி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆசனூர், அரப்பாளையம், சென்டர் தொட்டி, ஓங்களவாடி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதி மற்றும் புதர்களில் சிறுத்தை பதுங்கியிருப்பதை கண்டறிய அதிநவீன தெர்மல் டிரோன் கேமராக்கள் மற்றும் ஆங்காங்கே கேமரா டிராப் கருவிகளைப் பொருத்தி வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வனத்துறை கட்டுப்பாடுகள்

மலை கிராம மக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அவசர தேவைகளுக்கு குழுவாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு கருதி இப்பகுதியில் உள்ள மதுபானக் கடை மாலை 7 மணிக்குள் அடைக்கப்பட்டன. வனவிலங்கு நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT