ஈரோடு,
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில், காரின் குறுக்கே சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து உலா வந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதி என்பதால், இங்குள்ள யானை, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது சாலைக்கு வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திம்பம் மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவு பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோர தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்த சிறுத்தை ஒன்று, திடீரென ஒரு பூனையைப் போல லாவகமாகக் கீழே குதித்து, மின்னல் வேகத்தில் காரின் குறுக்கே பாய்ந்து சாலையைக் கடந்து சென்றது.
எதிர்பாராத விதமாக மிக அருகில் சிறுத்தை குறுக்கே பாய்ந்ததால், காரை ஓட்டிச் சென்றவர் மற்றும் உள்ளே இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து உடனடியாக வாகனத்தை நிறுத்தினர். இந்த திக் திக் காட்சிகள் காரில் இருந்தவர்களின் செல்போனில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது.
திம்பம் மலைப்பாதையில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும், வனவிலங்குகளைப் படம் பிடிக்கவோ, அவற்றுக்கு இடையூறு விளைவிக்கவோ கூடாது என்றும் வனத்துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இப்பகுதியில் இரவு நேரப் பயணத்தின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.