தமிழக செய்திகள்

கூடலூர் அருகே கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தை பத்திரமாக மீட்பு

கூடலூரில் அருகே கம்பி வேலியில் மாட்டிக் கொண்ட சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பிதிர்காடு வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட பாட்டவயல் வெள்ளேரியில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள பயிர்களுக்கு காட்டு விலங்குகளால் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக, சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கம்பி வேலியில் நேற்று சிறுத்தை ஒன்று மாட்டிக் கொண்டது. இதுகுறித்த தகவல் மாவட்ட வன அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதுமலை புலிகள் காப்பகம் உதவி வன கால்நடை மருத்துவர் மற்றும் வனப் பணியாளர்கள், கம்பி வேலியில் சிக்கி இருந்த சிறுத்தையை மீட்டனர்.

சிறுத்தையின் உடலில் இருந்த சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று காலை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சிறுத்தை பாதுகாப்பாக விடப்பட்டது.