வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் உலாவும் சிறுத்தைகளால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்டதாகும். தற்போது இப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி என வினவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, வால்பாறை நகர குடியிருப்பு பகுதிகள், எஸ்டேட் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், பொதுமக்கள் மாலை நேரங்களில் வெளியே வர வேண்டாம், குழந்தைகளும் விளையாட வர வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சோலையார் முடிஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் 2 சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.