தமிழக செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

நேற்று இரவு 12 மணி அளவில் திம்பம் மலைப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சிறுத்தை ஒன்று மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இதைப்போல் திம்பம் தாளவாடி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் தடுப்பு சுவரில் சிறுத்தை நடமாடுவதும் சாலையோரம் நடமாடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையில் சிறுத்தை நடமாடியது அதேபோன்று அங்குள்ள தடுப்பு சுவரிலும் சிறுத்தை படுத்திருந்தது

தொடர்ந்து திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் திம்பம் மலைப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சிறுத்தை ஒன்று மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டார். அந்த சிறுத்தையும் வாகன ஓட்டிக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் தொடர்ந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது.

இதைக் கண்ட வாகன ஓட்டிகள் சிறுத்தையை வாகனத்தில் பின் தொடர்ந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சிகள் அனைத்தையும் வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கீழே இறங்க வேண்டாம் எனவும், வாகனத்தை மெதுவாக ஓட்டி செல்லவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.