சென்னை,
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) தொடங்கி ஏப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்த தொகுதி மறுவரையறைக்கான சட்டத்திருத்த முன்மொழிவுகளை எதிர்த்து உள்ளன. இதற்கிடையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகத்தில் கருப்புக்கொடி போராட்டம் இன்று நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.பின்னர் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது. இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ”.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.