சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகினில் வாழும் கிறிஸ்தவ சமுதாய பெருமக்கள் அனைவரிடத்திலும் அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய பங்காற்றி வருகின்றனர். முதியோர் இல்லம், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி, நலிந்தோர்களுக்கு மருத்துவ உதவிகள் போன்ற நற்பணிகளை தொடர்ந்து செய்து வருவது பாராட்டுக்குரியது.
இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு அருளிய அன்பு, கருணை, தியாகம், சமத்துவம் மற்றும் சேவை என்ற மகத்தான கொள்கைகள் என்றும் நம் வாழ்வில் ஒளிவிளக்காய் திகழட்டும். கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த அவர், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து மனித குலத்திற்கு நம்பிக்கையின் ஒளியை ஏற்றி வைத்தார். அந்த உயிர்ப்பின் செய்தி என்றும் நம் இதயங்களில் எதிரொலிக்கட்டும்.
இந்த புனித திருநாள், வறுமையில் வாடுவோருக்கு நம்பிக்கையாகவும், துன்பத்தில் தவிப்போருக்கு ஆறுதலாகவும், இருளில் தவிப்பவர்களுக்கு வெளிச்சமாகவும் வழிகாட்டட்டும். இயேசுவின் போதனைகள் நமக்கு கற்றுத் தந்த ‘அன்பே சிறந்தது" என்ற நெறி, நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிமுறையாகும்.
காங்கிரஸ் கட்சி தன் தொடக்கம் முதலே அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக கொள்கையில் உறுதியாக இருக்கிறது. நம் நாட்டில் சமாதானமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் கைகோர்த்து, இந்தியாவை மேலும் வலிமையாகவும் சமத்துவமாகவும் கட்டி எழுப்புவோம்.
இந்த நாள் உங்கள் குடும்பத்திற்கும், உங்களை நேசிப்பவர்களுக்கும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செழிப்பும் நிறைந்த நாளாக அமையட்டும். இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் என் இனிய நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.