சென்னை,
1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயா் மாற்றம் செய்யும் தீா்மானத்தை அண்ணா தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அந்த ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அறிவித்த நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
"மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.
எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சியில்தான் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம்.
தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.