சென்னை,
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவரும், வெள்ளையர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி பொருளாதாரப் போராட்டம் நடத்தியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வ.உ.சி.யின் தியாகங்களையும் பெருமைகளையும் நினைவுகூர்ந்து தனது எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டுப் பொருளியல் போர் புரிந்த பெருந்தகை!
தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி சிறைசென்று மாடுகூட இழுக்கத் தயங்கும் செக்கினை இழுத்தச் செம்மல்!
சேர்த்து வைத்த செல்வங்களையெல்லாம் விடுதலைப்போருக்கு ஈந்து வறுமையில் வாடிய வள்ளல்!
தமிழ் இலக்கியங்களைப் பழுதற கற்றுணர்ந்த தமிழ்ப்பேரறிஞர்!
நமது தியாகமிகு பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவுநாளில் பெருமிதத்துடனும் அவர் பெரும் புகழ் போற்றுவோம்!
வழிவழியே வரும் மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம்,நமது பாட்டனார் வ.உ.சி அவர்கள் காட்டிய வழியில் தாய் மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையும், நேர்மையுமாகத் தொடர்ந்து அயராது பாடுபட உறுதியேற்போம்!
கப்பலோட்டிய தமிழர் நமது பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு புகழ் வணக்கம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.