சென்னை ,
சென்னை அண்ணாமலையின் தலைமையில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மரங்களை வளர்த்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி நடைபெற்றது.
தவெக ஆட்சியில் ஊழல் குறையவில்லை தொடங்கியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேரணியில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது;-
நமது அமைப்பை அரசியலாக மாற்றி மக்களுக்கான அரசியலாக செயல்படப்போகிறோம். சேவை மனப்பான்மையோடு வருபவர்களால் மட்டும்தான் அடிப்படை அரசியலை மாற்ற முடியும். வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய 73 நாட்களில் 20 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.
தலைவர்கள் டெல்லியில் அமர்ந்து தமிழ்நாட்டின் முடிவை எடுக்கக்கூடாது. டெல்லி, சென்னை ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன், பனையூரில் இருந்து முடிவெடுப்பேன் என்ற காலம் மாறிவிட்டது.
நான் அரசியல் பேசவில்லை என கூறுகின்றனர். உலகத்தில் அரசியல் பேசுவதுதான் எளிமையான வேலை. அரசியலை செய்வதற்கு அண்ணாமலை வேண்டாம். புதிதாக வந்துள்ளவர்களுக்கு ஓராண்டு தருவோம். ஓராண்டுக்கு பிறகு செயல்பாடு சரியில்லை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்போம். ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் அரசியலாக உள்ளது. அட்ஜெஸ்ட்மெண்ட் அரசியலை விட்டுவிட்டு மக்களுக்கான அரசியலை எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டும்.
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நியாயமான தீர்ப்பை தமிழகத்துக்கு தர வேண்டும். மேகதாது கட்டுவதில் பிரச்சினை இல்லை என மத்திய அரசு கூறுவதை கேட்கும்போது நெஞ்சு வலிக்கிறது. பள்ளிகள், நீர்நிலைகள், கிராமப்புறங்களை சீரமைக்க முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
வீ த லீடர்ஸ் அமைப்பு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கிறது. பிரதமர் மோடியை நான் நம்புகிறேன். அவர் நேர்மையான மனிதர். தவறு செய்யாத மனிதர். எனவே அவர் இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையை தீர்க்க யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இரு மாநில முதல்-அமைச்சர்களையும் அமர வைத்து பேச வேண்டும்.
அமித் ஷாவை பார்த்தார். அதனால் பாஜகவின் பீ டீம் என என்னைப் பற்றி பேசுகிறார்கள். டெல்லியில் பொறுப்பெடுத்து 3 ஆண்டுகள் அங்கிருக்கும்படி அமித் ஷா கூறினார். அவரிடம் வேண்டாம் என சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டிலேயே மக்கள் சேவை செய்து, அரசியல் செய்கிறேன் என அமித் ஷாவிடம் கூறினேன்.
தவெக ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது என கூறிகிறார்கள். ஆனால் ஊழல் குறையவில்லை தொடங்கியுள்ளது. டெண்டருக்கு அமைச்சர்கள் பணம் வாங்குகிறார்கள். அது குறித்து என்னிடம் ஆடியோவே உள்ளது. சில அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்பவர்களுக்கு எதிராக முதல்-அமைச்சர் கடிவாளம் போட வேண்டும். நமது காலத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.