சென்னை,
சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் கடலூர் முதுநகரில் அம்மாக்கண்ணு - முத்துமணி தம்பதியருக்கு மகளாக 1890-ம் ஆண்டு பிறந்தார். திண்ணை பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இவர் சிறுவயது முதல் சுதந்திரப்பற்று மிக்கவராக திகழ்ந்தார். 1921-ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது அதில் கலந்துகொண்டு தனது பொது வாழ்க்கையை தொடங்கினார்.
மகாத்மா காந்தியடிகள் கடலூருக்கு வந்தபோது அவரைச் சந்திப்பதற்கு அஞ்சலை அம்மாளுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. ஆனால், அஞ்சலை அம்மாள் அத்தடையை மீறி பர்தா அணிந்து காந்தியடிகளை அழைத்துச் சென்றார். அதனால் அஞ்சலை அம்மாள் "தென்னாட்டின் ஜான்சி ராணி" என மகாத்மா காந்தியடிகளால் அழைக்கப்பட்டார்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் 1937, 1946 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் நலனிற்காக தியாக வாழ்க்கை மேற்கொண்ட சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் வாழ்வு என்றென்றும் போற்றுதலுக்குரியதாகும்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தாய்நாட்டின் விடுதலை, தன்னலமற்ற சமூக சேவை, அநீதிக்கு எதிரான துணிச்சலான போராட்டங்கள் என தனிப்பெரும் ஆளுமையாக களமாடிய மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் இன்று.
மது ஒழிப்பிற்காக கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டவர். மக்கள் போராட்டத்திற்காக சிறை, சித்திரவதைகள் என அடக்குமுறைகள் சூழ்ந்தபோதும் அச்சமின்றி பொது வாழ்வில் பயணித்தவர். தமிழ் நிலத்தின் பெருமிதத்திற்குரிய தலைவர் - நமது கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாள் புகழை போற்றுவோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.