தமிழக செய்திகள்

நல்லிணக்கமும், ஒற்றுமை உணர்வும் தழைக்க உறுதி ஏற்போம் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

இப்ராஹீம் நபியை தனி மனிதர் என்று கூறாமல் அவர் ஒரு சமுதாயம் என இறைவன் அடையாளப்படுத்துகிறான் என முஹம்மது ஷிப்லி.

சென்னை,

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இப்ராஹீம் நபி

தியாகத் திருநாள் என்கிற பெருநாளை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நன்னாளில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்வுறுகிறேன்.இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை மனித குலத்திற்கு படிப்பினையாக ஆக்கி,அவரது பாதையை முன்மாதிரியாக காட்டித் தருகிறான் இறைவன்.

முஸ்லிம்கள்

படைப்புகள் கடவுள் அல்ல;படைத்தவனே கடவுள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ததால் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி என அவரை முஸ்லிம்கள் போற்றுகிறார்கள்.ஆயுதத்தை அவர் கையில் ஏந்தவில்லை;அறிவாயுதத்தை ஏந்தினார்.மூட நம்பிக்கைகளை அறிவுப்பூர்வமான வாதங்கள் மூலம் தகர்த்தெறிந்தார்.

ஒற்றுமை

சாதி,மதம்,இனம்,மொழி,பணக்காரன்,ஏழை என எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல் உலகளாவிய சகோதரத்துவத்தை,ஒற்றுமையை வலியுறுத்தும் சர்வதேச மாநாடான ஹஜ் கடமை நபி இப்ராஹீம் குடும்பத்தை மையப்படுத்தியே இன்று முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.அதனால்தான் இப்ராஹீம் நபியை தனி மனிதர் என்று கூறாமல் அவர் ஒரு சமுதாயம் என இறைவன் அடையாளப்படுத்துகிறான்.

உலகம் இன்று அமைதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறது.சாதி மத ஏற்றத்தாழ்வுகள்,உயிர்பலிகள்,பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை;பொருளாதார சுரண்டல்,மத மோதல்கள்,சுயநல அரசியல்,மனித உரிமை மீறல்கள் என மனித விரோத செயல்கள் மலிந்து போன தால் பூமிப் பந்தில் அமைதி தொலைந்து கொண்டிருக்கிறது.

இந்த அமைதி தொலைந்து போக காரணமான மனித குல விரோதிகளை அடையாளம் கண்டு வேரறுப்போம்;வகுப்புவாத சக்திகளை இனம் கண்டு தனிமைப்படுத்துவோம்;பயங்கர வாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வீழ்த்த தியாகம் செய்வோம்.மனித உரிமை மீறல்க ளுக்கு எதிராக அறப்போர் புரிவோம்;இந்தியா ஜனநாயக தன்மையை இழந்துவிடாமல் காக்கும் பணியில் நம்மை அற்பணிப்போம் இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய,அமைதியும்,நல்லிணக்கமும்,ஒற்றுமை உணர்வும் தழைக்க இந்த தியாக திருநாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.