சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் ‘பக்ரீத்' திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'பக்ரீத்' திருநான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவனின் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன்வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் தினமே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கி... அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.