எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்" கொண்டவளே பெண் என்று பாடினான் பாரதி. அந்தத் தார்மீகக் குணத்தோடு, சமூகத்தின் சரிபாதி சக்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய பெண்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் சார்பாகப் பெண்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஒரு ஆணைப் படித்தவனாக்கினால் அவன் ஒருவனாகவே மிஞ்சுவான்; ஆனால் ஒரு பெண்ணைப் படித்தவளாக்கினால் அந்தத் தலைமுறையே அறிவொளி பெறும்" என்பதற்கேற்ப, பெண் என்பவள் உடல், மனம் மற்றும் அறிவு ரீதியாக முழுமையான பலம் பெற வேண்டும். கல்வி மற்றும் அறிவாற்றல் மூலம் பெண்கள் பெறும் வளர்ச்சியே, ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் அச்சாணியாகும்.
"பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோ?" என்ற புரட்சிக்கவிஞரின் கருத்தை உள்வாங்கி, சமூக நீதி மற்றும் உரிமைகளுக்கான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு முன்னெப்போதையும் விட இன்று முதன்மை பெற வேண்டும். பெண்கள் வெறும் பயனாளிகளாக மட்டுமல்லாமல், அதிகாரப் பகிர்விலும், தலைமைத்துவத்திலும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் மிக்க சக்திகளாகத் திகழ வேண்டும்.
பெண்கள் சுயமாகப் பலம்பெற வேண்டிய அதே வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும். ஒரு கூட்டான முயற்சியின் வாயிலாகத்தான் பெண்களின் முன்னேற்றத்தை நம்மால் முழுமையாக உறுதிசெய்ய இயலும். 2026-ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினக் கருப்பொருளான "பெண்களின் தலைமைத்துவத்தை அங்கீகரிப்போம்: சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி" என்பதற்கேற்ப, தடைகளைத் தகர்த்து சாதனைகள் பல படைத்திட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வாழ்த்துகிறேன்.
வலிமை மற்றும் உத்வேகத்தின் அடையாளமாகத் திகழும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பையும், சமமான உரிமையையும் நிலைநாட்ட இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம். பெண் சமூகத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் சமரசமின்றி உழைக்கின்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.