தமிழக செய்திகள்

2030 ஆம் ஆண்டிற்குள் எச்ஐவி இல்லா நிலையை அடைய ஒருங்கிணைந்து உழைப்போம் - அமைச்சர் அருண்ராஜ்

2010ல் 0.4% ஆக இருந்த எச்ஐவி தொற்று, தீவிரமான விழிப்புணர்வு பிரசாரத்தால் 2023ல் 0.19% ஆக குறைந்துள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எச்ஐவி, பால்வினை நோய்கள் தொற்று குறித்த தேசிய விழிப்புணர்வு பிரசாரத்தின் தமிழ்நாட்டு அளவிலான நிறைவு விழா இன்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கத்திலே நடைபெற்றது. இதனை அமைச்சர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பிரசாரம்

இது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12 வரை நடக்கும் எச்ஐவி, பால்வினை நோய்கள் தொற்று குறித்த தேசிய விழிப்புணர்வு பிரசாரத்தின் தமிழ்நாட்டு அளவிலான நிறைவு விழா இன்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கத்திலே நடைபெற்றது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 2010ல் 0.4% ஆக இருந்த எச்ஐவி தொற்று, அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் தீவிரமான விழிப்புணர்வு பிரசாரத்தால் 2023இல் 0.19% ஆக குறைந்துள்ளது.

மேலும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.

உதவித் தொகை உயர்வு

இதன்படி பெற்றோர் இருவரையும் இழந்து எச்ஐவி தொற்றோடு வாழும் குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 3000 ரூபாயாகவும், பெற்றோரில் ஒருவரை இழந்து எச்ஐவி தொற்றோடு வாழும் குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாயாகவும், பெற்றோர்களோடு வாழும் எச்ஐவி தொற்றுள்ள குழந்தைகளுக்கு மாதம் 1500 ரூபாயாகவும் உதவித்தொகை வருகிற நவம்பர் முதல் உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் எச்ஐவி தொற்றால் பெற்றோர்களை இழந்து தொற்று பாதிப்பு இல்லாமல் வாழும் குழந்தைகளுக்கு மாதம் 1500 ரூபாயாகவும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தோம்.

மேலும் விழிப்புணர்வு பிரசாரத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினோம்.

2030 ஆம் ஆண்டிற்குள் HIV/AIDS இல்லா நிலையை அடைய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT