சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் துணிச்சல், சமூகநீதி சிந்தனையை போற்றுவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 78-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதல்-அமைச்சராக தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் நினைவு கூர்கிறேன்.
துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார்; சட்டம் - ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 69% இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அதை சட்டரீதியாக முறியடித்து சமூகநீதியின் மீது தாம் கொண்டிருந்த அக்கறையை நிரூபித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.